தெலங்கானா: மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெலங்கானா மக்களை ஏமாற்றி வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.15) குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் அவரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பியதற்காக 'பொய்களின் பாட்ஷா' என்று விமர்சித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுள்ளதாகவும் கே.டி.ராமா ராவ் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பிரஜா சங்க்ராம யாத்ரா' நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.15) பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, "முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?. அந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். தண்ணீர், நிதி, வேலை உள்ளிட்டவை கொடுப்போம்.