தெலங்கானா: இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மின்னஞ்சலுக்கு கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்ததால், மும்பை மற்றும் வெளிநாட்டில் இருக்கும் அவரது வீட்டிற்கும், Z+ பாதுகாப்பு அளித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
முகேஷ் அம்பானியின் மின்னஞ்சலுக்கு தன்னை சதாப் கான் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட மர்ம நபர் மூலம், கடந்த அக் 27-ஆம் தேதி ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக முகேஷ் அம்பானி தரப்பில் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
முகேஷ் அம்பானியின் இந்த புகாரின் அடிப்படையில், மும்பை காம்தேவி காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 387 (ஒரு நபரை மரண பயத்தில் அல்லது மிரட்டி பணம் பறிப்பதற்காகக் கடுமையாகக் காயப்படுத்துதல்) மற்றும் 506 (2) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், கடந்த 28-ஆம் தேதி அதே நபரிடம் இருந்து ரூ.20 கோடி வேண்டாம், 200 கோடி ரூபாய் வேண்டும் என்றும், பணம் தர மறுத்தால் குடும்பத்தைக் கொன்று விடுவோம் எனவும் மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்ததாக, காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நீங்கள் எங்களுக்கு 400 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், எங்களிடம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடுபவர்கள் இருக்கிறார்கள் என மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக, தெலங்கானாவைச் சேர்ந்த கணேஷ் வனபர்தி (19) என்ற இளைஞரை இன்று (நவ.4) போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் கணேஷ் வனபர்தி, மும்பை கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவரை நவம்பர் 8-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:உ.பி. அலிகார் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு? போலீசார் தீவிர விசாரணை!