ஹைதராபாத்:நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது. வெப்ப அலை தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த 16ஆம் தேதி அதிகபட்சமாக 45.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இது ஒரே நாளில் 1.2 டிகிரி அளவுக்கு அதிகரித்து நேற்று(மே.17) 46.4 டிகிரி செல்சியசை எட்டியது.
நேற்றைய நிலவரப்படி, பெரும்பாலும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 40 முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக ஜுலுருபாட்டில் 46.4 டிகிரி செல்சியசும், பையாரதம் என்ற இடத்தில் 45.3 டிகிரி செல்சியசும், சூர்யாபேட்டையில் 45.2 டிகிரி செல்சியசும், நல்கொண்டாவில் 45.2 டிகிரி செல்சியசும், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தின் மகாதேவ்பூரில் 44.9 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.
பகலில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் கூட வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி இரவு, ஹனுமகொண்டாவில் 31 டிகிரி செல்சியசும், கம்மத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.6 டிகிரி அதிகமாகும்.