ஐதராபாத் :தெலங்கானாவில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளான பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கும் மகாலட்சுமி திட்டம் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 10 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கும் ஆரோக்யஸ்ரீ திட்டத்தை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கடந்த திங்கட்கிழமை (டிச. 11) மட்டும் 50 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்து உள்ளதாக தெலங்கானா மாநில சாலை மற்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை என்பதால் கோயில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு மக்கள் செல்லக் கூடும் என்பதால் அது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற சாதாரண நாட்களில் ஏறத்தாழ 40 லட்சம் பேர் வரை பயணித்து உள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை மட்டும் மக்கள் கூட்டம் 20 சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 41 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக கருதப்பட்ட நிலையில் அந்த சாதனையையும் முறியடித்து புது மைல்கல் படைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.