ஹைதராபாத்: தெலங்கான அரசு உருவான காலகட்டத்திலிருந்து மாநிலத்தில் வேளாண்மையைச் செழுமையாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதில் முக்கியமான ஒரு திட்டம் ரைத்து பந்து. தற்போது 'ரைத்து பந்து' நிதி உதவித் திட்டத்தின்கீழ் மாநிலத்தில் உள்ள 61.49 லட்சம் உழவர்களுக்கு நிதி உதவி அளிக்கவுள்ளதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் உள்ள 61.49 லட்சம் உழவர்களின் 1.52 கோடி ஏக்கர் சாகுபடி நிலத்திற்கு 2020ஆம் ஆண்டின் கோடை காலத்திற்குள் ஏக்கருக்கு ரூ.5,000 என்ற விகிதத்தில் ரூ.7,515 கோடி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஏக்கருக்குமான தொகையினை உழவர்கள் அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாகப் பெறுவதை உறுதிசெய்யுமாறு வழிவகைசெய்யப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், "புதிய வேளாண் சட்டங்களின்கீழ் உழவர்கள் தங்கள் பயிர்களை எங்கும் விற்க முடியும். கிராமங்களில் மாநில அரசு கொள்முதல் மையங்களை அமைக்கத் தேவையில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையைச் செலுத்துவதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, அரசு கிராமங்களிலேயே கொள்முதல் மையங்களை அமைத்து, உழவர்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் வேளாண்மை விளைபொருள்களை வாங்கியது. ஆனால், ஒவ்வொரு முறையும் இதேயே செய்ய முடியாது.
பயிரிட வேண்டிய பயிர்கள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிடுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், அதனை உழவர்களே முடிவுசெய்ய வேண்டும்" என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்' - எல்.முருகன்