ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, பத்ராசலம் நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் நேற்று (ஜூலை 17) பார்வையிட்டார். தொடர்ந்து, வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
ஆய்வு கூட்டத்தில் முழுகு, பூபாலப்பள்ளி, கொத்தகுடெம், மகபூபாபாத், நிர்மல் ஆகிய மாவட்டங்களில் உடனடி நிவாரண பணிகளுக்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், 20 கிலோ அரிசியும் வழங்க உத்தரவிட்டார். மேலும், அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவுக்கு எதிராக சில நாடுகள் செயல்படுகின்றன என்றும் அவைதான் இங்கு ஏற்படும் மேக வெடிப்புகளுக்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார். கடந்த சில நாள்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியிலும், உத்தரகாண்டிலும் ஏற்பட்ட மேக வெடிப்பு சம்பவங்களை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், கோதாவரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பத்ராசலம் பாலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் , ஆய்வு மேற்கொண்டார். இம்மாத இறுதிவரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படி முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!