தெலங்கானா: தெலங்கானாவில் மாநில அரசுக்கும், ஆளுநர் தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் தமிழிசை தங்களது நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் கேசிஆர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு ஆளுநர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தெலங்கானாவில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 3ஆம் தேதி தாக்கல் செய்ய மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டுக்கு அவர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக மாநில அரசுக்கு ஆளுநர் மாளிகை கடிதம் எழுதியது.
பட்ஜெட் தாக்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா அரசு நீதிமன்றத்தை நாடியது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தெலங்கானா அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.