ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் திருமணத்தன்று மணமகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், மனம் தளராத மணமகன் மருத்துவமனையிலேயே அவரை திருமணம் செய்துகொண்டார். மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் பகுதியை சேர்ந்த பனோத் ஷைலஜா என்பவருக்கும், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் பஸ்வராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் பிப்ரவரி 23ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாகவே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவந்த நிலையில், ஷைலஜாவுக்கு பிப்.22ஆம் தேதி திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மஞ்சேரியல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் கட்டி உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மணமகள் வீட்டார் திருமணத்தை சில வாரம் தள்ளிப்போட சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர். அதனடிப்படையில் அன்றே அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இவர் குணமடைய ஒரு வாரமாகும் அதுவரை திருமணத்தை நடத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனிடையே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் மணமகன் வீட்டாரிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.