ஹைதராபாத்:தெலங்கானாவின் 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.30) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
முன்னதாக, காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அவர்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். தேர்தலின்போது திரைப் பிரபலங்கள் வாக்குகள் கவனத்திற்குரியதாக மாறிவரும் நிலையில், தெலுங்கு திரைப் பிரபலங்கள் அவர்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிரஞ்சீவி அவரது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி நகரில் வாக்குகளை பதிவு செய்தார். ஆர்.ஆர்.ஆர் பிரபலம் ஜூனியர் என்டிஆர், அவரது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் உள்ள பி ஒபுல் ரெட்டி அரசுப் பள்ளியில் வாக்குகளைப் பதிவு செய்தார்.
மேலும், புஷ்பா நடிகர் அல்லு அர்ஜூன் 153வது வாக்குச் சாவடியான பி.எஸ்.என்.எல் மையத்தில் அவரது வாக்குகளை பதிவு செய்தார். பின்னர், நடிகர் நாக சைதன்யா, ராணா டகுபதி உள்ளிட்ட நடிகர்களும், அவர்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பதிவிட்டுள்ளார்.
அவரது சமூக வலைத்தளத்தில், “வாக்குப்பதிவு என்பது விடுமுறை அல்ல, அது ஒரு பொறுப்பு. நாம் அனைவரும் இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் ஒரு முன்மாதிரியை அமைத்து, மற்றவர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக ஆரம்பத்தில் வந்தேன். எனது உரிமையைப் பயன்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என பதிவிட்டார்.
2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 221 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். மேலும், தெலங்கானாவில் மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:நிலவிற்கு மனிதனை அனுப்பி பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதே குறிக்கோள் - இஸ்ரோ தலைவர் சோமநாத்