ஹைதராபாத்:தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரத ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 30ஆம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 60க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இது குறித்து அம்மாநில ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளதாவது,“தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகச் சந்திர சேகர் ராவ் நேற்று (நவ.03) ஆளுநருக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரும் படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.