டெல்லி: ஜம்மு - காஷ்மீரில் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பரப்புவதாகவும் தடை செய்யப்பட்ட அமைப்பாக தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை இன்று (டிச.31) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பை மறைந்த சையத் அலி ஷா கிலானி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெஹ்ரீக்-இ-ஹுரியத் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும், இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புவதாகவும் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, TeH அமைப்பை இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு சட்ட விரோத அமைப்பாக யு.ஏ.பி.ஏ (UAPA - The Unlawful Activities (Prevention) Act, 1967.) சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான முயற்சிகளை இந்த அமைப்பு எடுத்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவிற்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் கருத்துக்களைப் பரப்புவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சதவீதம் கூட இடம் அளிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தனது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.