பாட்னா:தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வர்த்தக நகரங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பெரும்பாலும் பீகாரை சேர்ந்த வடமாநில இளைஞர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். வடமாநிலத்தவர்களால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என பரவலாக கருத்து எழுந்துள்ளது.
இதற்கிடையே, பீகார் மாநில தொழிலாளர்களை, தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் தாக்குவதாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இது பீகார் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் பீகார் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. சட்டமன்றம் இன்று (மார்ச் 3) கூடியதும், அமளியில் ஈடுபட்ட பாஜகவினர், பீகார் இளைஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க, தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பக்கோரி போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், "பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தமிழ்நாடு டிஜிபி மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பாஜக குற்றம்சாட்டுகிறது" என்றார்.
இதற்கிடையே தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வெளியான 2 வீடியோக்களும் போலியானவை. அந்த இரண்டு தாக்குதல்களும் திருப்பூர் மற்றும் கோவையில் நடந்தது. அவை இரண்டும் தமிழ்நாடு மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே நடந்தவை அல்ல. ஒரு வீடியோவில் இருப்பது வடமாநிலங்களைச் சேர்ந்த இருபிரிவு தொழிலாளர்கள் இடையேயானது. மற்றொன்று, கோவையைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல்" எனக் குறிப்பிட்டார்.