புதுடெல்லி:டெட் எனப்படும்ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் செல்லுபடித் தன்மையை ஏழு ஆண்டுகளிலிருந்து ஆயுள்காலம் முழுவதும் நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும், ஏழு ஆண்டு காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்வது, புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், கற்பித்தல் துறையில் ஈடுபட ஆர்வமாகவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியாக இது அமையும் என்றும் அவர் அமைச்சர் தெரிவித்தார்.
பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிவதற்குத் தேவையான அத்தியாவசிய தகுதிகளுள் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் நாள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு இதற்கான சான்றிதழ் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.