டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அக்குழுமத்திற்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உப்பு தொடங்கி மென்பொருள் வரை அனைத்துத் தொழில்களிலும் தடம்பதித்துள்ள டாடா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி. 2012ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவை தொடர்ந்து நிர்வாகத் தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார்.
ஆனால், 2016ஆம் ஆண்டு, நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அவரின் பதவி பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நிர்வாகத் தலைவராக நியமித்து தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து டாடா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மிஸ்திரியின் சொந்த நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், "மிஸ்திரியை நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது. பெருநிறுவன நிர்வாகத்தின் கொள்கைகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன" என நீதிமன்றத்தில் வாதாடியது.