சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், கஜுராஹோ விமான நிலையத்திலிருந்து ரேவாவுக்கு சென்றார். அப்போது கஜுராஹோ விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேனீர் மற்றும் காலை உணவு தரமற்றதான இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தேனீர் சூடாக இல்லை என தெரிகிறது. இதையடுத்து, தரமற்ற உணவு மற்றும் தேனீரை ஏற்பாடு செய்த உணவு விநியோக அதிகாரி ராகேஷ் கன்ஹுவாவுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மூன்று நாட்களுக்கு விளக்கம் அளிக்கவும் சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் சத்தர்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கன்ஹுவாவுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. கன்ஹுவா ஏற்பாடு செய்த தேனீர் மற்றும் காலை உணவு முதலமைச்சருக்கு வழங்கப்படவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.