புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் மாத வருமானம் இரண்டாயிரத்து 499 ரூபாய் கீழ் உள்ளவர்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தினை பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் கொண்டு சேர்க்க ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம், பிற துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “புதுச்சேரியை சேர்ந்த மாத வருமானம் இரண்டாயிரத்து 499 ரூபாய் சம்பாதிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இலவச சிகிச்சை
ஜிப்மருக்கு பல மாநிலங்களிலிருந்து பலர் சிகிச்சைக்கு வருவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக உள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, நோய் கண்டறிதல், இன் பிளான்ட் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம்.
பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிவப்பு ரேஷன் கார்டுகள் காண்பித்தால் மட்டுமே இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும் தகுதியாக கேட்கக்கூடாது. இத்திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.