புதுச்சேரி:ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும், தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவிவகித்த கோனிஜெட்டி ரோசய்யா (88) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிசம்பர் 4) காலை காலமானார்.
அவரது மறைவை அடுத்து பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசையும் ரோசய்யா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுத் தலைவர்
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராகவும், மிகச் சிறப்பாகச் செயலாற்றிய ரோசய்யா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராகத் திகழ்ந்தவர்.
அரை நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து தென்னிந்திய அரசியலில் பயணித்தவர். ஆந்திராவில் மிக அதிகமான நாள்கள் அமைச்சராகப் பதவி வகித்து சரித்திரச் சாதனைபுரிந்தவர். அவரது இழப்பு மக்களுக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!