டெல்லி:2022 - 2023ஆம் நிதியாண்டில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த நிலுவைத் தொகைகள் அல்லது மொத்தக் கடன்கள், புதிய சாதனை உச்சத்தை தொட்டு உள்ளன. மத்திய அரசு வெளியிட்டு உள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, நாட்டிலேயே தமிழ்நாடு அதிகக் கடனைக் கொண்ட மாநிலமாக உள்ளது தெரிய வந்து உள்ளது.
இது கடந்த நிதியாண்டின் நிதிநிலை மதிப்பீட்டின்படி, ரூ.7.53 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம், அதே நிதியாண்டில் ரூ.7.1 லட்சம் கோடி அளவிற்கு கடனைக் கொண்டு உள்ளது.
மகாராஷ்டிரா (ரூ.6.8 லட்சம் கோடி), மேற்கு வங்கம் (ரூ.6.08 லட்சம் கோடி), ராஜஸ்தான் (ரூ.5.37 லட்சம் கோடி), கர்நாடகா (ரூ.5.35 லட்சம் கோடி), ஆந்திரப் பிரதேசம் (ரூ.4.42 லட்சம் கோடி), குஜராத் (4.23 லட்சம் கோடி ரூபாய்), கேரளா (ரூ.3.8 லட்சம் கோடி), மத்தியப்பிரதேசம் (ரூ.3.8 லட்சம் கோடி), மத்தியப்பிரதேசம் (ரூ.3.91 லட்சம் கோடி), அதிக கடனில் உள்ள மற்ற முக்கிய மாநிலங்கள் வரிசையில், பஞ்சாப் (ரூ.3.05 லட்சம் கோடி), ஹரியானா (ரூ.2.87 லட்சம் கோடி), பீகார் (ரூ. 2.86 லட்சம் கோடி) உள்ளன.
மக்களவையில், நேற்று (ஜூலை 24) எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “நாட்டின் அனைத்து மாநிலங்களும் தங்கள் சொந்த நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டங்களை இயற்றி உள்ளன. அந்தந்த மாநிலத்தின் FRBM சட்டத்திற்கு இணங்குவது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் எந்த ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியும் எந்த ஒரு மாநில அரசுக்கும் கடன் வழங்கவில்லை” என தெரிவித்து உள்ளார்.
சில மாநிலங்கள் தங்கள் நிதியை நிர்வகிப்பதில், மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதையும், நிலுவையில் உள்ள கடன்களைக் குறைக்க சிறந்த நிதிக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பகிர்ந்து உள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
உதாரணமாக, நாட்டிலேயே கடந்த மூன்று நிதியாண்டுகளில் கடனைக் குறைத்த ஒரே மாநிலமாக ஒடிசா விளங்குகிறது. ஒடிசா மாநிலம், 2019 - 2020ஆம் நிதியாண்டில் 1.8 சதவீதமும், 2020-21ஆம் நிதியாண்டில் 8.4 சதவீதமும், 2022 - 2023 நிதியாண்டில் 12 சதவீதமும் மாநிலத்தின் பொதுக்கடனை குறைத்து, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் வேறு எந்த மாநில அரசாலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தி உள்ளது.