பாட்னா:தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக திருப்பூரில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியாகின.
இந்த வீடியோக்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை எச்சரித்தது. தனிப்படை அமைத்து கைது நடவடிக்கையும் மேற்கொண்டது.
போலீசாரின் விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து பீகாரைச் சேர்ந்த அமன்குமார், மணிஷ் காஷ்யப் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விவரங்கள் பீகார் மாநில காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பீகார் மாநில போலீசார் அமன்குமார், மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அமன்குமார் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் முன்ஜாமீன் வாங்க முயற்சித்தார், ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிறகு மணிஷ் காஷ்யப்பின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த சுமார் 42 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் முடக்கினர். இதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி யூடியூபர் மணிஷ் காஷ்யப் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ஜக்திஷ்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை பீகார் போலீசார் கைது செய்தனர். மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்ட அன்றைக்கே தமிழ்நாடு போலீசார் குழு, பீகார் சென்றதாகத் தெரிகிறது.
பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மணிஷ் காஷ்யப்பை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அதில் மணிஷ் காஷ்யப் பணம் வாங்கிக் கொண்டு யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றியதாகத் தெரியவந்தது. மணிஷ் காஷ்யப்பின் காவல் நேற்றுடன்(மார்ச்.27) நிறைவடைந்தது.
இதையடுத்து தமிழ்நாடு போலீசார் மணிஷ் காஷ்யப்பை டிரான்சிட் ரிமாண்டில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதற்காக நேற்று பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த பாட்னா நீதிமன்றம், மணிஷ் காஷ்யப்பை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து மணிஷ் காஷ்யப் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாடு போலீசார் யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்குப் புறப்பட்டனர்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய யூடியூபர் போலீசில் சரண்!