தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு! - தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

SC
SC

By

Published : Aug 28, 2021, 8:14 PM IST

டெல்லி : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது (மேகேதாட்டு) என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை ஒன்றை கட்ட முயற்சித்துவருகிறது.

ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த அணையில் 67.16 டிஎம்சி நீர் சேமித்துவைக்கப்படும். மேலும், 400 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.

கர்நாடக அரசின் இந்தத் திட்டம் காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்பாயத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் விரோதமானது ஆகும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 67.16 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையிலும், 400 மெகா வாட் மின்சாரம் எடுக்கும் வகையில் கர்நாடக மாநில அரசு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை செயல்படுத்த முனைகிறது.

இது 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் 2018 பிப்ரவரி 16ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும்போது அது மேல்கரையோர மக்களை பாதிக்காது. ஆனால் கீழ் கரையோர மாநிலங்களுக்கு திட்டமிட்ட நீர் விநியோகத்தை பாதிக்கும்.

மேலும், கபினி நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கபினி துணைப் படுகையின் நீர்ப்பிடிப்பு, கேஆர்எஸ் அணையின் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு, சிம்ஷா, அர்காவதி மற்றும் சுவர்ணவதி துணைப் படுகைகள் ஆகியவற்றிலிருந்து காவிரியில் உருவாகும் நீரோட்டத்தை இந்தத் திட்டம் கட்டுப்படுத்தும்.

இந்த அணை கட்டப்படும்பட்சத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நீர் விநியோகமும் பாதிக்கப்படும். தமிழ்நாடு விவசாயிகள் கர்நாடகத்தில் இருந்துவரும் நீர்தேவையை நம்பியுள்ளனர்.

இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். ஆகவே கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகா அரசு அனுப்பியுள்ள மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் தமிழ்நாடு சார்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு- கர்நாடகா இடையே மேகதாது திட்டம் மீண்டும் சச்சரவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இதையும் படிங்க : மேகதாது - தமிழ்நாடு அரசு புதிய மனு

ABOUT THE AUTHOR

...view details