டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று (ஜூலை 7) இரவு டெல்லி சென்றார். இந்த நிலையில், இன்று (ஜூலை 8) காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரம், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, திமுக தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல்போக்கு வெகு நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், கடந்த ஜூன் 14 அன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனால், செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு பங்கிட்டு கொடுப்பதாகவும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதாகவும் ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்த ஆளுநர், அதன் நீட்சியாக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தார்.
ஆனால், இவ்வாறு அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்த உத்தரவை தனது மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகல் தொடர்பான இசைவு கடிதம் குறித்த ஆணைக்காகவும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது திமுக தரப்பிலான ஆளுநருக்கு தரும் அழுத்தமாக பார்க்கப்பட, மற்றொரு புறம் ஆன்மீகம், சனாதனம் போன்றவற்றை ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் பேசி வருவது திமுகவினரை வெறுப்புக்கு உள்ளாக்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் செய்வதாக புகார் எழுந்த நிலையில், சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தான் குழந்தைத் திருமணம் செய்ததாக ஆளுநர் வெளிப்படையாகக் கூறியது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. இருப்பினும், ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பாஜக மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.
இவ்வாறு இருக்க, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறதா என்றும், அண்ணாமலை யார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தது தமிழ்நாடு பாஜகவில் மீண்டும் மீண்டும் விவாதத்தை முன் வைத்தது. இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது அரசியல் மேடையில் கவனிக்க வைத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆர்.என்.ரவியின் அடுத்தடுத்த டெல்லி நகர்வு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இதையும் படிங்க:'குற்றவியல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது' - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்