டெல்லி:தமிழ்நாட்டில் ஆளுநருக்கு, ஆளும் கட்சிக்குமான உறவு என்பது எப்போது, ஏட்டிக்குப் போட்டியாக இருப்பதாக கருதப்படுகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் காலம் வரை, ஆளுநருடன் சுமூக உறவின் மூலம் ஆட்சி நடந்ததே அரிதாக காணப்படுகிறது.
அந்த வகையில் தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுகவிற்குமான உறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் நீட் தேர்வு விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான கட்டுரைகளும், செய்திகளும் முரசொலியில் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், 'தமிழ்நாடு' என்பதற்குப் பதிலாக 'தமிழகம்' எனச் சொல்வது சரியாக இருக்கும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டனக் கணைகளை தொடுத்தனர்.
இந்நிலையில், பற்றி எரியும் நெருப்பில், எண்ணையை ஊற்றியது போல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், தமிழ்நாடு, திராவிட மாடல், மதநல்லிணக்கம், சமத்துவம், சமூகநீதி, பல்லுயிர் ஓம்புதல், பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் இருந்த பகுதியை அவர் படிக்காமல் தவிர்த்து விட்டதாகவும் கூறி அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்தனர்.