டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 30) நள்ளிரவில் டெல்லி சென்றார். அவருக்கு திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 31) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா - கலைஞர் அறிவாலய அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நீர்வளப் பிரச்சனைகள்
காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான பிரச்சனை.
மீன்வளம்
1) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
2) "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது.
எரிசக்தி
1) நிலக்கரி குறித்த விவகாரங்கள் – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான ரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல்.
2) ரெய்கார் – புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்.
நிதி
1) மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது.
2) ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் அடங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அழைப்பு விடுக்கிறார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது , திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
சோனியா காந்தி உடன் ஸ்டாலின் ஏப்ரல் 2 ஆம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பின், அன்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க:வன்னியர் சிறப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்