ஹைதராபாத்:கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் கடந்த மே 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும் கைப்பற்றின.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளது. இதற்காக, பெங்களூருவில் உள்ள கண்டிரவா மைதானத்தில் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் சித்தராமையா கர்நாடகவின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சித்தராமையாவிற்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இந்த கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், இமாச்சல முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் இடம்பெற்றிருந்தார்.
பாஜகவை அனைத்து மாநிலங்களிலும் வெல்வதற்கு திராவிடமாடல் தேவை; அதனை அடைய அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஓரணியில் திரளவேண்டும் என்பதே திமுகவின் முக்கிய நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகா இல்லாத தென்னிந்திய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என்ற வரிசையில் தற்போது கர்நாடகா மாநிலமும் இணைந்துள்ளது என்பதை திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.