சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் நேற்று (மார்ச். 23) கோர வெடி விபத்து ஏற்பட்டது. நண்பகல் வேளையில் நடந்த இந்த வெடி விபத்தில் ஆலையில் பணியாற்றிக் கொண்டு இருந்த 25க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு எதிரொலித்த இந்த பட்டாசு விபத்தில், ஆலையின் கட்டடங்கள் இடித்து விழுந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 5 பேரும், சிகிச்சை பலனின்றி என ஒட்டுமொத்தமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றானர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளனர். காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டு உள்ளதாக" தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!