சென்னை: சென்னை மாநகராட்சியின் 165-வது வார்டு உறுப்பினராக நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான ஈஸ்வர பிரசாத், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், அடையாறில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு ஈஸ்வர பிரசாத் மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஈஸ்வர பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். ஈஸ்வர பிரசாத்தின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கவுன்சிலர் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் “தமது பகுதி மக்களின் தேவைகளுக்காக முன்னின்று அவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் திரு. நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், காங்கிரஸ் பேரியக்கத்தினர், பொது மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ராகுல் யாத்திரையில் பிரியங்கா காந்தி - கணவர், மகனுடன் பங்கேற்பு