இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பள்ளிக்கல்வி, உயர் கல்வி அளவில் பாடத்திட்டங்களை மாற்றவும் குழு அமைக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து இன்றும், நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் நாடு முழுவதும் கல்வி அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் தமிழ்நாட்டின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. அதேபோன்று உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக நடைபெறும் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு பங்கேற்கவில்லை. ஏற்கெனவே தமிழ்நாடு ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முரண்பாடு நிலவி வருகிறது.