ஐதராபாத் : இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் செய்வது மற்றும் சனாதன தர்மத்தை வெறுப்பது ஆகிய இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப்போவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஒடிசாவைச் சேர்ந்த பல்தேவ் ஷாகு குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா உள்பட பல்வேறு இடங்களில் நிறுவனத்துடன் தொடர்புடைய இயக்குநர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனையில் கட்டுக் கட்டாக பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட பல்தேவ் ஷாகு குழுமம், ஒடிசாவை சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனத்துடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.