இலங்கை:தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை, இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பாக இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் அவரது இந்திய வருகையின்போது வலியுறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புகூறலையும் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நிலம், போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வை நிராகரித்து, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு இலங்கை முயற்சிப்பதாகவும் இலங்கையின் தமிழ் மக்களது பாதுகாப்பு, தனித்துவம் மற்றும் இருப்பு என்பன இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.