பெங்களூரு(கர்நாடகா):கர்நாடக தமிழர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் முதன்முறையாக டிச.25 முதல் ஜன.1ஆம் தேதிவரை பெங்களூரு நகரில் அல்சூர் பகுதியிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் 8 நாட்களுக்கு தமிழ் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது. கர்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர்.
வரும் டிச.25ஆம் தேதி மாலை 3 மணியளவில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ். ஆனந்த்குமார், தினச்சுடர் ஆசிரியர் பா. அமுதன், கர்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் அ. தனஞ்செயன் ஆகியோர் தலைமையில் அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.
இத்திருவிழாவில், சங்க காலம் முதல் நவீன காலம் வரையிலான இலக்கியப்படைப்புகள் அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கும். தமிழ்ப் புத்தகத் திருழாவில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையில் புத்தகக்காட்சி அரங்குகள், பொதுமக்கள் வருகைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்; அனுமதி இலவசம்.
மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படும். புத்தகக்காட்சியில் இடம்பெற்றிருக்கும் அரங்கங்களில் ரூ.100 மதிப்புள்ள அன்பளிப்புச்சீட்டை அளித்து விரும்பிய நூலை வாங்கிக்கொள்ளலாம்.
பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் இராம்பிரசாத் மனோகர், ஜி. மோகன் உள்ளிட்ட கொடையாளர்களின் உதவியால் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பாக அளிக்கப்படுகின்றன. தமிழ்ப் புத்தகத் திருவிழா வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகும். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களிடையே, குறிப்பாக தமிழ்க் குழந்தைகளிடம் தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தை தூண்டிவிடும் நோக்கில் நடத்தப்படும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக 8 நாட்களும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு மொழித்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கல்லூரி மாணவர்களுக்கு சொற்பொழிவு, கவிதை, ஓவியம், கட்டுரைப்போட்டிகளும், பள்ளி மாணவர்களுக்கு உலக நீதி ஒப்புவித்தல், மாறுவேடப்போட்டிகள் (ஆரம்பப்பள்ளி), திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டிகள் (நடுநிலைப்பள்ளி), சொற்பொழிவு, பாடல் போட்டிகளும் (உயர்நிலைப்பள்ளி), பொதுமக்களுக்கு சொற்பொழிவு, கவிதை, கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன.