பாட்னா: பிகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்து வந்தது. கூட்டணியில் இருந்த போதும், பாஜக மேலிடத்துடன் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தன. பாஜகவுடனான மோதல் போக்கு நீடித்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தது. அதன்படி, முதலமைச்சர் பதவியை நேற்று (ஆக. 9) ராஜினாமா செய்த நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், பிகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று (ஆக. 10) மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சௌஹானால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் எட்டாவது முறை பதவியேற்றுள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா மேடையில் நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் கட்டித்தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.