மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் இஐவி 22 என்று பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவை இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய கட்கரி, "நீண்ட காலத்திற்கான போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
நகர போக்குவரத்து அமைப்பை சீரமைக்கும் நோக்கில் குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். நாட்டு மக்களிடையே பசுமை போக்குவரத்திற்கு எதிர்பார்ப்பும் ஆர்வமும் உள்ளது. அதற்கு ஏற்றார் போல மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசு தொலைநோக்கு திட்டங்கள், கொள்கைகளை வகுத்துவருகிறது.