2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பாஜக அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. பல மாநிலங்களில் திரை மறைவாக காய்களை நகர்த்தி ஆட்சியையும் எம்எல்ஏக்களையும் தனதாக்கியது. இந்த ஆடுபுலி ஆட்டத்தை பாஜக நேரடியாக நடத்திகாட்டிய மற்றொரு மாநிலம் மேற்கு வங்கம்.
வங்காளிகள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அள்ளி கொடுத்த வெற்றி, அக்கட்சியை குஷியாக்கியதுடன், இனி ஆளுங்கட்சி நாங்கள்தான் என்ற கனவில் மிதக்கவும் செய்தது. விளைவு, எம்எல்ஏ முதல் அமைச்சர்கள் வரை, மக்களவை உறுப்பினர்கள் முதல் மாநிலங்களவை உறுப்பினர்கள் வரை பாஜக பக்கம்.
நந்திகிராம் போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து ட்வீட் செய்ததும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கொளுத்திப் போட்டதும் உச்சகட்டம். இறுதியாக மம்தா பானர்ஜி சொந்த மருமகனுக்காக ஆட்சி நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு தூணாகச் செயல்பட்ட சுவேந்து ஆதிகாரியை பாஜகவுக்கு இழுத்தனர்.
தன் கையை வைத்தே கண்களை குருடாக்குவதுபோல், நந்திகிராம் தொகுதிக்குள் வந்து பாருங்கள் என ஆதிகாரியை வைத்தே கூக்குரல் எழுப்பச் செய்தனர். நந்திகிராமம் திரிணாமுல் காங்கிரஸோடு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது.
ஆம்... தசாப்தங்கள் பல, நீடித்த இடதுசாரிகளின் ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாக மாறிப்போனது இந்தத் தொகுதியில் நடந்த போராட்டம்தான். மம்தாவின் இமேஜை வானளவு உயர்த்திய போராட்டம் அது.
பாஜக ஆசை
அடுத்து மம்தா ஆட்சி என வங்காளிகள் பெருமிதம் கொண்டனர். மக்களின் எதிர்பார்ப்பு போல், இடதுசாரி ஆட்சி வீழ்த்தப்பட்டது, மம்தா பானர்ஜி அரியணை ஏறினார். மாநிலத்தில் மட்டுமல்ல, மாநிலத்திற்கு வெளியேயும் எளிய கதர் ஆடை பூண்டு சிங்கப் பெண்ணாகவே வலம்வந்தார்.
பாஜகவின் இந்தி மொழி திணிப்பை உறுதியோடு எதிர்க்கிறார். மேற்கு வங்கம் வெளி ஆள்களுக்கு இல்லை என்று கம்பீர குரல் எழுப்புகிறார். அமித் ஷாவை வானில் வட்டமிட வைக்கிறார். குர்தா, ரசகுல்லா, தீதி (சகோதரி) என்று பேசினாலும் மோடியையும் டீலில் விடுகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கிறார்.
ஆகையால், இவரை எப்படியாவது நிர்கதியாக்கி, மேற்கு வங்கத்தை தனதாக்க வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு துடிக்கிறது. மறுபுறம் கிஞ்சிற்றும் அசராமல், எள்ளளவும் துணிவு குன்றாமல் பாஜகவுக்குச் சம்மட்டி அடி கொடுக்கிறார் மம்தா.
மம்தாவுக்கு ஆதிகாரி சவால்
இதற்கிடையில், சுவேந்து ஆதிகாரியின் கட்சி மாறுதல், பாஜகவுக்குப் பெரும் உற்சாகத்தை கொடுத்தது. ஏனெனில் நந்திகிராம் போராட்டத்தை முன்னின்று நடத்திய உள்ளூர் தலைவர்களில் அவர் முக்கியமானவர். பாஜகவில் ஐக்கியமான ஆதிகாரி, நந்திகிராமில் மம்தா பானர்ஜியால் போட்டியிட முடியுமா? உள்ளே நுழையக்கூட முடியாது என்று வம்பிழுத்தார்.
நந்திகிராம் 2011இல் மம்தா பானர்ஜிக்கு பெருவெற்றியை வாரிவழங்கிய தொகுதி. ஆக, நந்திகிராம் மம்தாவுக்கு ஆதரவான தொகுதிதான். எனினும் ஆதிகாரியின் எதிர்ப்பால் மம்தா அங்கு போட்டியிடுவதைத் தவிர்ப்பார் என்றே அரசியல் விமர்சகர்கள் உள்பட பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் நந்திகிராம் தற்போது ஆதிகாரி வசம். ஆம்... அவர்தான் நந்திகிராமின் முன்னாள் எம்எல்ஏ!
நான் வர்றேன்... முடிஞ்சா தடுத்துப் பார்
இதற்கிடையில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த மம்தா, “நான் வர்றேன்... முடிஞ்சா தடுத்துப் பார்” என்று ஆதிகாரி உள்பட பாஜகவினரின் முகத்தில் ஓங்கி அறைந்ததுபோல் நந்திகிராமில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். அத்துடன், “வங்காளிகள் வெளி ஆள்களை (பாஜக) ஒருபோதும் விரும்புவதில்லை. இது வங்கத்து மண். எங்கள் தாய் மண்” என்றும் கர்ஜித்தார்.
ஆதிகாரியும் தன் பங்குக்கு, “நல்லது... மம்தா பானர்ஜியை வரவேற்கிறேன். எங்கள் மக்கள் உங்களுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். எங்களுக்கு மிட்னாப்பூரின் மகன்தான் தேவை. அந்நியர்கள் அல்ல. வாருங்கள் களத்தில் சந்திப்போம். மே 2ஆம் தேதி நீங்கள் வெற்றி தோல்வி அடைந்து வெளியேறுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பட்டியலினம்- பழங்குடியினருக்கு வாய்ப்பு
மம்தா பானர்ஜியின் அதிரடி நடவடிக்கை பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மம்தா பானர்ஜி அறிவித்துள்ள 291 வேட்பாளர்களில் 50 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டியலினத்தைச் சேர்ந்த 79 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 பேருக்கும் போட்டியிடுகின்றனர். 42 பேர் இஸ்லாமியர்கள்.
டார்ஜிலிங், கலிம்போங், குர்ஷியோங் ஆகிய மூன்று தொகுதிகள் கூட்டணி கட்சியில் உள்ள கூர்கா ஜன்முக்தி மோர்சா (ஜிஜேஎம்) கட்சிக்கு வழங்கப்பட்டுஉள்ளது. ஆக, பாஜகவின் கடும் நெருக்கடிகளையும் மீறி மம்தா தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துவிட்டார். பாஜக இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை; திணறல் தொடர்கிறது.
மே 2 தீர்ப்பு
மம்தா சுழற்றும் சாட்டையில் தாக்குப்பிடிக்குமா பாஜக, மக்களின் தீர்ப்பு என்ன? என்பன போன்ற பற்பல சுவாரஸ்யமான வினாக்களுக்கு உழைப்பாளர் தினத்துக்கு அடுத்தநாள் விடை கிடைத்துவிடும்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும், இறுதிகட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கைகோர்க்கப் போகிறார் மம்தா; சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை