சுரஜ்பூர் : சத்தீஸ்கரில் செல்போன் திருடியதாக எழுந்த சந்தேகத்தில் பழங்குடியின இலைஞர் ஜேசிபி இயந்திரத்தில் கட்டிவைத்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுரஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர் தனிப்பட்ட பணிகளுக்காக மயாபூர் சென்று உள்ளார். மயாபூரில் இருந்து சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில் பிரதாப்பூர் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்த்துக் கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் தனது செல்போனை காணவில்லை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இளைஞர் அருகில் இருந்ததால், அவர்தான் திருடியதாக ஜேசிபி ஓட்டுநர் கருதியதாக கூறப்படும் நிலையில், மேலும் 3 பேருடன் சேர்ந்து பழங்குடியின இளைஞரை தாக்கி உள்ளனர்.
ஜேசிபி இயந்திரத்தில் கைகளை கட்டிவைத்த நான்கு பேரும், செல்போ திருடியதாக பழங்குடியின இளைஞரை தாக்கி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக நான்கு பேரும் பழங்குடியின இளைஞரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பிய இளைஞர் அங்கு உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்து உள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முதற்கட்டமாக மூன்று பேரை கைது செய்ததாக தெரிவித்து உள்ளனர். நான்காவது நபர் தலைமறைவானதாக கூறிய போலீசார் அவரையும் தேடி வருவதாக கூறினர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அபிஷேக் படேல், கிருஷ்ண குமார் படேல் மற்றும் சோனு ரத்தோட் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், பழங்குடியின இளைஞர் ஜேசிபி இயந்திரத்தில் கட்டி தொடங்கவிடப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதையும் படிங்க :மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்... அமித்ஷாவுடன் சந்திப்பு.. டெல்லி விரைந்த குழு!