ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பாலியில் பாந்த்ரா-ஜோத்பூர் சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் இன்று (ஜனவரி 2) அதிகாலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இதுகுறித்து வடமேற்கு ரயில்வே தரப்பில், பாந்த்ராவில் இருந்து ஜோத்பூர் நோக்கிப் புறப்பட்ட சூர்யனநகரி எக்ஸ்பிரஸ்(suryanagari express) ரயிலின் 11 பெட்டிகள் ராஜ்கியாவாஸ்-போமத்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை 3:27 மணியளவில் தடம் புரண்டன.
இதுவரை உயிரிழப்புகளோ, படுகாயங்களோ பதிவாகவில்லை. ரயில்வே போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு ரயிலில் பயணித்த குடும்ப உறுப்பினர்களுக்கான ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.