வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், அதன் அருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. கடந்த 1991ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சிங்கார கெளரி அம்மனுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சிங்கார கெளரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்காக, மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், இந்து, முஸ்லீம் வழக்கறிஞர்கள் அடங்கிய நீதிமன்றக் குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த 6ஆம் தேதி மசூதி வளாகத்தில் கள ஆய்வை தொடங்கியது. பின்னர், மசூதிக்கு உள்ளேயும் கள ஆய்வு நடத்துவதற்காக நீதிமன்றக் குழுவினர் சென்றபோது, இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.