சூரத்:குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள உதானா பகுதியில் இருக்கும் ஒரு நடைபாதையில் தேநீர் மற்றும் சில சிற்றுண்டிகளை விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையின் உரிமையாளர், ராம்லகான் ராய்க்வார். சூரத்தின் டிண்டோலியில் வசித்து வரும் இவருக்கு நீலம், சோனோ மற்றும் மோனு ஆகிய 3 பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில், 3 பெண் குழந்தைகளும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
இது குறித்து மோனு கூறுகையில், “நான் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் விளையாடி உள்ளேன். அது மட்டுமல்லாமல் எனது இரண்டு சகோதரிகளான நீலம் மற்றும் சோனோ ஆகியோரும் மாநில மற்றும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
நான் எனது கல்வி அல்லது மல்யுத்த பயணத்தில் பெற்ற அனைத்து சாதனைகளுக்கும் என்னுடைய தந்தைதான் காரணம். நான் எனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, எனக்கான துறையைத் தேர்வு செய்து அதில் சாதனைப் படைத்ததற்கு என்னுடைய தந்தைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், நான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவள். அங்கு பெண்களுக்கான களம் மறுக்கப்படுகிறது. முக்கியமாக, மல்யுத்தம் என்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், எனது தந்தையோ நாங்கள் மூவரும் பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலும் சரி, அதன் பிறகு நாங்கள் எங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்தது வரையிலும் சரி, என்னுடைய தந்தையின் சுதந்திரம் இருந்தது. என்னுடைய அப்பா நடைபாதையில் தேநீர் வியாபாரத்தை இரவு பகலாக செய்து, எங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார்” என தெரிவித்தார்.