மும்பை (மகாராஷ்டிரா):தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே அணி ராஜ்ய சபா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி தொகுதி எம்.பியும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலேவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்து செய்தி ஒன்று வந்ததாக தெரிவித்து உள்ளார். மேலும் சுப்ரியா சுலே, தனது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த கொலை மிரட்டல் செய்தி உடன் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கரிடம், தன் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்து உள்ளார்.
மேலும், சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து மகாராஷ்டிரா உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கவனிக்க வேண்டும் என சுப்ரியா சுலே வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள தெற்கு சைபர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மும்பை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்தியிலும், மகாராஷ்டிர அரசிலும் பல பதவிகளை வகித்த சரத் பவாருக்கு கடந்த காலங்களிலும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.