தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈபிஎஸா! ஓபிஎஸா! - அதிமுக யாருக்கு? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக யார் வசம் செல்ல போகிறது என்ற உச்சக் கட்ட எதிர்பார்ப்பு தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே நிலவுகிறது.

Supreme Court
Supreme Court

By

Published : Feb 23, 2023, 6:45 AM IST

சென்னை:கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதே கூட்டத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக இரண்டாக அதிமுக பிளவுபட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ரத்து செய்து தனி நீதிபதி தீர்ப்பு வெளியிட்டார்.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் அவைத்தலைவர் தலைமையில் கூட்டப்படும் பொதுக்குழுவில் தேர்தெடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். அதிமுகவின் 99 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இருப்பதாக அவைத் தலைவர் தமிழ் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உச்ச கட்ட எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அதிமுகவை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும் நிலவுகிறது.

இதையும் படிங்க:தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details