டெல்லி:அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் தலைமை அலுவலக சாவியை கோருவது எப்படி..?. ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் உயர் நீதிமன்றம் வழங்கியதில் தவறு ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்ததால், வருவாய்த்துறை அலுவலர்கள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதனால் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் அலுவல சாவி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.