டெல்லி: மருத்துவ காரணங்களுக்காக தனது கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்குமாறு பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் ஏற்கனவே அக்டோபர் 5ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் 25 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருந்த பெண்ணின் உடல் நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவக் குழுவை அமைக்குமாறு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (அக்.9) நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மனுதாரரை மருத்துவ ரீதியாக கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்தனர்.
மேலும், ஒரு பெண்ணின் உடலின் மீதான உரிமையை நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. தேவையற்ற கர்ப்பம் ஒரு குழந்தை உலகிற்குக் கொண்டு வரப்பட்டால், அத்தகைய குழந்தையை வளர்க்கும் பொறுப்பின் பெரு ம்பகுதி பொறுப்பை மனுதாரரே ஏற்க வேண்டியிருக்கும். ஆகையால், அந்த பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தையை வளர்க்கும் நிலையில் அவர் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.