தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"மணிப்பூர் விவகாரத்தில் மன்னிப்பு கிடையாது"... உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை! - டி ஒய் சந்திரசூட்

சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளாவில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுடன், மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை ஒப்பிட்டு பார்த்து நியாயப்படுத்த விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.

Manipur
Manipur

By

Published : Jul 31, 2023, 4:49 PM IST

டெல்லி : மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதை, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுடன் ஒப்பிட்டு பார்த்து நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வரும் நிலையில் பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், கடந்த மே மாதம் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டி இருக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதையடுத்து வீடியோ விவகாரம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த மத்திய மற்றும் மாநில அரசு பரிந்துரை செய்தது. அதேநேரம் சிபிஐயின் விசாரணை மாநிலத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பன்சுரி சுவராஜ், மணிப்பூர் மட்டுமின்றி சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக தெரிவித்தார். மேலும் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது 40 முதல் 50 பேர் பெண் வேட்பாளரின் ஆடைகலை களைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும் அது குறித்து இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் அறிக்கை அளித்தார்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுடன், மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை ஒப்பிட்டு பார்த்து நியாயப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் மணிப்பூரில் இயற்கைக்கு எதிரான இன மற்றும் மதக் கலவரங்களுக்கு அப்பாற்பட்ட முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை கையாள்வதாக தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்தார். சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் அது சமூக யதார்த்தத்தின் அங்கமாக மாறி விட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மணிப்பூரைப் போன்று நாட்டின் பல்வேறு பகுதியில் நடக்கிறது என்பதற்காகவும் பெண்களுக்கு எதிரான பல குற்றங்களையும் மன்னிக்க முடியாது என்றும் மணிப்பூர் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது, நீதிமன்றத்திற்கு உதவுவது அல்லது விசாரணையின் கட்டமைப்பை வகுத்து கொள்வது என்பது தான் கேள்வி என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க :மணிப்பூர் விவகாரம் : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details