டெல்லி :விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகள் பரஸ்பர சம்மதத்துடன் பிரிய விரும்பினால் 6 மாத காலம் கட்டாய காத்திருப்பு அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்த விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் இந்த பரபரப்பு தீர்ப்பை அறிவித்தனர். திருமண உறவில் விருப்பம் இல்லாத தம்பதிகள் 6 மாத காலம் விவாகரத்திற்கு காத்திருக்க அவசியம் இல்லை என்றும்; பரஸ்பரம் பிரிய விரும்பும்பட்சத்தில் விவாகரத்து பெற முடியும் என்றும் வழக்கை விசாரித்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.
இதுபோன்ற திருமணத்தின் மீள முடியாத முறிவு என்னும் பட்சத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றத்திற்குச் சிறப்பு அதிகாரம் உள்ளது எனக் கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதேநேரம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின்போது பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து பெற 6 மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பாக முடிவெடுப்பது உள்ளிட்ட சூழ்நிலைகளில் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு விவாகரத்து பெற முடியும் என நீதிபதிகள் கூறினர். விவாகரத்து பெற விரும்பும் தம்பதி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற, ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும் என இந்து திருமணச்சட்டம் 13 பி சட்டப்பிரிவு கூறுகிறது.