தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

RSS பேரணி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு! - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme
உச்சநீதிமன்றம்

By

Published : Mar 27, 2023, 1:13 PM IST

டெல்லி: தமிழ்நாட்டில் கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட 50 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர், காவல்துறையிடம் அனுமதி கோரினர். காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை எனக்கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் பேரணியை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், திறந்த வெளியில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீண்டும் விண்ணப்பிக்கலாம், அதற்கு போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கட்டுப்பாடுகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பதற்றமான 6 இடங்களைத் தவிர, 44 இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனிடையே ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தங்களது மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 1ஆம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது உளவுத் துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், ஆனால் எதையும் கவனத்தில் கொள்ளாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விரும்பி இடத்தில் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிக முக்கியம் என்பதால், உளவுத் துறையின் அறிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசு ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று(மார்ச்.27) உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 50 இடங்களில் அனுமதி தர முடியாது என்றும், முதல் கட்டமாக 5 இடங்களில் மட்டுமே அனுமதி தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு - அமலாக்கத்துறையை எதிர்த்து கேசிஆர் மகள் கவிதா மனு - இன்று விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details