டெல்லி:தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் 2019ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல் கட்டுமானப் பணிகள் எதுவும் துவங்கப்படாததால், பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பி.கே.மிஷ்ரா, மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் ஸ்ரீதருண் பாலாஜி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி தாமதமாவது தொடர்பாக கே.கே.ரமேஷ் உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் (Sanjay Kishan Kaul) அமர்வு விசாரித்தது. அப்போது, அடிக்கல் நாட்டப்பட்டதில் இருந்து எய்ம்ஸ் கட்டுமானப்பணி துவங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.