டெல்லி : தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கும் அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும் பட்டாசு வெடிக்க அரசு தடை விதித்தால் அது முழுமையான தடை தான் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
தலைநகர் டெல்லியில் தீபாவளி உள்ளிட்ட விழாக்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து முதலமமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் அத்மி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்தார்.
இது மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ் போபன்னா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு வெடிக்க அரசு தடை விதித்தால் அது தடை தான் என்றும், டெல்லி அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், மனோஜ் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெல்லி அரசு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்துள்ளது என்றும் அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்றும் வாதிட்டார். மேலும் பட்டாசு பயன்பாட்டுக்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்றும் டெல்லி அரசு பசுமை தீர்பாயம் மற்றும் நீதிமன்றம் அனுமதித்த பசுமை பட்டாசுகளுக்கும் சேர்த்து தடை விதித்து உள்ளதாக தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி போபன்னா, பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசு விரும்பினால், அது தடை தான் என்றும், அதில் உச்ச நீதிமன்றம் கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், மக்களின் உடல்நிலை மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல் மிகவும் முக்கியம் என்றும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படவில்லையோ அங்கே சென்று வெடிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், தீபாவளி மட்டுமல்லாமல், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போதும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்றும் வெற்றியை கொண்டாட பல்வேறு வழிகள் இருப்பதாகவும் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க :"அவளுக்கு வெரும் 11 ஆயிரம் டாலர் போதும்" இந்திய மாணவி மரணம் குறித்து அமெரிக்கா போலீஸ் கேலி பேச்சு!