டெல்லி:'மோடி' குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 7ஆம் தேதி ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்தியின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க:தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை
பின்னர், தனக்கு எதிரான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, பி.ஆர்.கவாய், சஞ்சய் குமார் ஆகிய மூவர் அடங்கிய அமர்வில் இன்று(ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பதிலாக ஒரு நாட்கள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் ஏற்பட்டிருக்காது எனக் கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக ரஃபேல் விவகாரத்தில் பிரதமருக்கு எதிராக விமர்சனம் செய்த ராகுல் காந்திக்கு, மீண்டும் இது போன்று சர்ச்சை விவாதங்கள் முற்படுத்தப்படக் கூடாது என்றும்; சமூகத்தில் முக்கியமானவர்கள் ஏதேனும் உரைகளை நிகழ்த்தும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மோடி சமுதாயம் குறித்து ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைக்கு, ரஃபேல் விவகாரம் மேற்கோள் காட்டப்பட்டு, ராகுல் காந்தியின் 2 ஆண்டுகள் கால சிறைத் தண்டனை குறித்து தனிநீதிபதி போதிய காரணங்கள் கொடுக்கப்படாததையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.
மேலும் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை குறித்த விளக்கம் இல்லை" எனக் கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர்வதோடு, தற்போது நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து பரவுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 76வது சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை - சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது!