டெல்லி:அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.என அணிகள் அதிமுகவில் உருவாகின. எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டார். மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேல்முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
மேலும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.