டெல்லி:புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாமல் உள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சங்கர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏழு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனு மீதான விசாரணை கடந்த 20ஆம் தேதி நடைபெற்றபோது, மூன்று முறைக்கு மேல் அவகாசம் அளித்த பின்பும் ஏன் இன்னும் தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது என நீதிபதி கோபமாகக் கேட்டார். அப்போது, கரோனா சூழல் காரணமாக தங்களால் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாகக் கூறிய தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த தங்களுக்கு ஏழு மாதம்கூட தேவையில்லை நான்கு மாத காலம் அவகாசம் போதும் எனத் தெரிவித்தது.