டெல்லி:அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் தனது கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி தினேஷ்வாரி அமர்வு, தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்கப் பரிசீலனை செய்யப்படும் எனக் கூறி, மனு மீதான விசாரணையை இன்று (ஜன.30) ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்றைய அமர்வில், ‘அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனு மீது, தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும்.
மேலும், பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் தாமதிக்காமல் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.3) ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு?